தீபாவளித் திருநாள் கொண்டாட்டத்தில் எல்லோரும் திளைத்திருக்கும்போது அந்தத் துயரச் செய்தி மகா பெரியவா பக்தர்கள் அனைவருக்கும் பேரிடியாகத்தான் இருந்திருக்கும்.
மகா பெரியவா சொன்ன எளிமையைக் கடைசிவரை சிரமேற்கொண்டு, தன் புகைப்படம்கூட வெளி வராமல் பார்த்துக் கொண்டு, புலன் அடக்கத்துடன் வாழ்ந்து, தன் காலத்தை மிகவும் அமைதியாக கோவிந்தபுரத்தில் மகா ஸ்வாமிகள் ஆலயத்தின் ஓரமாக ஓர் அறையில் கழித்துக் கொண்டிருந்த மேட்டூர் ஸ்வாமிகள் இன்று காலை ஸித்தி அடைந்து விட்டார். பெரிய இழப்பு.
கடந்த சில நாட்களாக உடல் நலம் குறைந்திருந்த மேட்டூர் ஸ்வாமிகள் மெள்ள உடல் நலம் தேறி வருவதாக வந்த செய்திகள் பக்தர்களின் மனதை உற்சாகப்படுத்தி இருந்த வேளையில் இந்தத் துயரச் செய்தி…
மேட்டூர் ஸ்வாமிகளின் அன்பாலும் அரணைப்பாலும் பெரிதும் நான் கவரப்பட்டது நான் பெற்ற பேறு என்றே சொல்ல வேண்டும்.
‘திரிசக்தி’ இதழில் ‘மகா பெரியவா’ குறித்து பக்தர்களின் அனுபவங்களை ஒரு தொடராக எழுத ஆரம்பித்திருந்த நேரம்… ‘சங்கர நேத்ராலயா’ திரு சிவராமன் ஒரு முறை சொன்னதன் பேரில் கும்பகோணம் சென்றிருந்த நான் கோவிந்தபுரம் போய் மேட்டூர் ஸ்வாமிகளிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு ‘திரிசக்தி’ இதழ்களையும் கொடுத்தேன் (அதுவரை எனக்கு அறிமுகம் இல்லை). ‘மகா பெரியவா குறித்த செய்திகளை அவரது பக்தர்களிடம் இருந்து திரட்டி தொடர் எழுதி வருகிறேன்’ என்று சொன்னேன். ‘ரொம்ப கவனமா எழுதுங்கோ… ஆதாரமானதை மட்டும் எழுதுங்கோ’ என்று என் மேல் நம்பிக்கை இல்லாமலே பேசிக் கொண்டிருந்தார். ‘ஆத்மார்த்தமாகவும் ஓரளவு ஆதாரத்துடனும்தானே எழுதி வருகிறோம்… இவர் இப்படிச் சொல்கிறாரே?’ என்று ஒரு குழப்பத்துடன் நமஸ்காரம் செய்து விட்டு, திருப்தி இல்லாமலே திரும்பினேன்.
இரண்டு மூன்று மாதங்கள் கழித்து கோவிந்தபுரம் மகா ஸ்வாமிகள் ஆலயத்தைத் தரிசிக்க குடும்பத்துடன் போயிருந்தேன். ஆலயத்தில் ஆச்சார்ய புருஷர்களை தரிசித்துக் கொண்டிருக்கும்போது அங்குள்ள அர்ச்சகர், ‘நீங்க திரிசக்தி சுவாமிநாதன்தானே… நீங்க எப்ப வந்தாலும், ஸ்வாமிகளைப் பாத்துட்டுப் போகுமாறு சொல்லி இருக்கார். உங்களைப் பத்தி ‘வந்தாரா?’னு கேட்டுண்டே இருப்பார். ஸ்வாமிகளை அவசியம் பாத்துட்டுப் போங்கோ’ என்று சொன்னார். மனதில் உற்சாகத்துடன் ஸ்வாமிகளைப் போய் தரிசித்தேன்.
புன்னகையுடன் வரவேற்றார். ‘நீங்க கொடுத்துட்டுப் போன திரிசக்தி இதழ்கள்ல ‘மகா பெரியவா’ தொடரைப் படிச்சேன். நன்னா வந்திருக்கு. தொடர்ந்து நிறைய எழுதுங்கோ’ என்று ஆசிர்வதித்தவர், சுமார் 40 நிமிடம் பேசிக் கொண்டிருந்தார். அடுத்தடுத்த மாதங்களில் போனபோது இதுபோல் முக்கால் மணி நேரம் பேச்சு ஓடிக் கொண்டிருந்தது (திரு சிவராமனிடம் ஒருமுறை கோவிந்தபுரத்தில் இருந்தபடியே, ‘ஸ்வாமிகளுடன் முக்கால் மணி நேரம் பேசிக் கொண்டிருந்தேன்’ என்றபோது, ‘குடுத்து வைத்தவர் நீங்கள். நாங்கள் போனால், பெரும்பாலும் அவ்வளவு நேரம் பேச மாட்டேங்கிறார்’ என்று அன்புடன் குறைப்பட்டுக் கொண்டார்).
இந்த நிலையில்தான் ஒரு முறை திரு ரங்கன் கௌடா வெளியிட்ட ‘மொமெண்ட்ஸ் ஆஃப் எ லைஃப்டைம்’ என்கிற ஆங்கில நூலை என்னிடம் தந்தார் மேட்டூர் ஸ்வாமிகள். மகா பெரியவாளின் பக்தர்கள் அனுபவங்கள் அடங்கிய அருமையான நூல் அது. ‘இதைப் படித்துப் பாருங்கள். உங்களுக்கு மேலும் பல நல்ல விஷயம் கிடைக்கும்’ என்றார்.
சென்னை வந்த பின் ஓரளவு படித்தேன். ‘இந்த அருமையான புத்தகத்தை தமிழில் நான் மொழி பெயர்த்து (எனது ‘மகா பெரியவா’ நூல் வெளிவருவதற்கு முன்) நானே வெளியிடலாமா?’ என்று யதேச்சையாக ஒரு நாள் சிவராமனிடம் கேட்டேன். ‘தாராளமா பண்ணலாம். எதுக்கும் மேட்டூர் ஸ்வாமிகளிடம் ஒரு தடவை சொல்லிடுங்கோ’ என்றார். அதை அடுத்து இதற்கென்றே ஒரு முறை கோவிந்தபுரம் போய் மேட்டூர் ஸ்வாமிகளிடம் விவரம் தெரிவித்தேன். ‘தாராளமா பண்ணுங்கோ… திரிசக்தில ஒங்க எழுத்தைப் பார்த்தேன். நீங்களே பண்ணா இன்னும் நன்னா இருக்கும்’ என்றார் (‘சுவாமிநாதனே மொழியாக்கம் பண்றதா இருந்தா அவரே தாராளமா பண்ணட்டும்’ என்று மேட்டூர் ஸ்வாமிகள் தன்னிடம் சொன்னதாக பின்னாளில் சிவராமனே ஒரு முறை தெரிவித்தார்).
‘நானே எழுதி இதை பப்ளிஷ் செய்யும்போது பின்னாளில் உரிமைப் பிரச்னை என்று சட்டச் சிக்கல் ஏதாவது வந்து விடுமோ?’ என்று எழுத்தாளருக்கே உண்டான சந்தேக புத்தியில் மேட்டூர் ஸ்வாமிகளிடம் கேட்டேன். புன்னகைத்தபடி, ‘போடுங்கோ… போடுங்கோ’ என்று வாய்மொழி உத்தரவு கொடுத்தார்.
மிகவும் சந்தோஷமாக சென்னை திரும்பி, தமிழாக்கம் செய்யும் பணி துவங்கியது.
என்னிடம் ஸ்வாமிகள் கொடுத்த ஆங்கிலப் புத்தகத்தில் சில பக்கங்கள் விடுபட்டுப் போயிருந்தன. சிலவற்றின் தொடர்ச்சி இல்லை. எனவே, அடுத்த ஓரிரு மாதங்களில் கோவிந்தபுரம் போய் இதைச் சொன்னேன். ‘ஆமாம்… பழைய புத்தகத்தில் இந்தக் குறை இருப்பதாகப் பலரும் சொன்னார்கள். அப்புறம் அடிச்ச வேற புத்தகம் தர்றேன்’ என்று திருத்தப்பட்ட ஒரு புத்தகம் கொடுத்தார்.
தமிழாக்கம் செய்யும் பணி வேகமாக நடந்தேறியது. வருகிற 2013 டிசம்பரில் இதை வெளியிடலாம்… அதுவும் மேட்டூர் ஸ்வாமிகள் திருக்கரங்களால் கோவிந்தபுரத்தில் வெளியிடலாம் என்று எனது தீர்மானித்திருந்தேன். வேலையும் துரித கதியில் நடந்து கொண்டிருக்கிறது.
ஆனால், அவரது திருக்கரத்தால் வெளியிடும் வாய்ப்பை இழந்து விட்டேனே என்று தவிக்கிறேன். ஆசைப்பட்டுக் கொடுத்த புத்தகத்தைப் பற்றி அடிக்கடி விசாரித்துக் கொண்டிருப்பார். அந்த அருமையான தமிழ் தொகுப்பை அவரது திருக்கரத்தால் வெளியிட முடியாமல் அவருக்கே அர்ப்பணம் செய்யும்படி ஆகி விட்டதே என்று நெஞ்சம் விம்முகிறது.
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.
– பி. சுவாமிநாதன்
2.11.2013 சனிக்கிழமை