மனைவி என்ன செய்கிறாள் என்று அவளைப் பற்றி யாராவது விசாரித்தால், ‘ஹவுஸ்ஒய்ஃப்’ என்று சர்வ சாதாரணமாகச் சொல்லி விடுகிறோம்.
இதற்குப் பலரும் என்ன அர்த்தம் வைத்திருக்கிறார்கள் என்றால், மனைவி ஆபீஸுக்குப் போவதில்லை. வீட்டில்தான் இருக்கிறாள் என்று.
ஆனால், தனி ஒருவளாக வீட்டில் அவள் செய்யும் சுத்துப்பட்டு வேலையை யாராலும் செய்து விட முடியாது என்பதே நிஜம்!
இதை உணர்ந்திருந்தாலும், அனுபவிக்க வேண்டிய வேளை எனக்கு வந்து விட்டது.
பேத்தி பிறந்ததை ஒட்டி, மகளுக்கு உதவுவதற்காக மருத்துவமனையில் மனைவி கேம்ப்! ‘சென்னை சில்க்ஸ்’ பேக்கில் துணிகளை மூட்டை கட்டிக் கொண்டு போய் விட்டாள். ஒரே மகள் பிரியமதுரா பிரசவம் காணப் போகிறாள் என்கிற உற்சாகம் அவளுக்கு.
வீட்டில் நான், என் மாமியார் (வயது 85) மற்றும் ஜுஜு (சுப்ரமணியன்).
வெகு அசால்ட்டாக என் மனைவி செல்லா எத்தனை வேலைகளைச் செய்கிறாள் என்று அவள் இல்லாதபோது கண்கூடாக உணர்ந்தேன்.
பால் பொங்குகிற நேரம் பார்த்து வேலைக்காரி வாசலில் கதவைத் தட்டுவாள்.
மெஷினில் போட்டுத் துவைத்த துணிகளை ஸ்பின் டிரை போட்டு உணர்த்தலாம் என்றால், எப்போதோ சொன்ன பிளம்பர் வாசலில் காலிங் பெல் அடிப்பார்.
காபி போடுவது, சிறு சிறு பாத்திரங்களைத் தேய்ப்பது, வேலைக்காரி தேய்த்து வைத்து விட்டுப் போன பாத்திரங்களைக் கொண்டு வந்து அடுக்குவது உள்ளிட்ட பணிகளைப் பல நாட்களில் மனைவிக்கு ஒத்தாசைக்காக செய்பவன்தான் (உண்மை. நம்புங்கள்)!
இருந்தாலும், வாஷிங் மெஷின் போடுவது, சாப்பாட்டுக் கடை, துணி மடிப்பது, வீட்டை சுத்தம் செய்வது, வாசலில் வருபவர்களை அட்டெண்ட் செய்வது... இப்படி இன்னும் சொல்ல முடியாதவை ஏராளம்...!
ஒரு நாள் அடுப்படியில் நின்று தோசை வார்த்து முடிப்பதற்குள் (நல்லவேளை... மாவு அரைத்து ஃபிரிஜ்ஜில் வைத்து விட்டுப் போயிருந்தாள் புண்ணியவதி) தாவு தீர்ந்து விட்டது.
அட... இந்த தோசை வார்ப்பதற்கு எத்தனை விஷயங்கள் தேவையாக இருக்கிறது... ஒரு பாத்திரத்தில் மாவு. எடுத்து கல்லில் ஊற்ற ஒரு குழி கரண்டி. தோசையைத் திருப்ப ஒரு தோசைதிருப்பி. கல்லில் ஊற்றுவதற்கு நல்லெண்ணெய். வார்த்த தோசைகளைப் போடுவதற்கு ஒரு தட்டு. தோசையைத் தொட்டு விட்டு எண்ணெயைத் தொடக் கூடாது என்பதற்காக அவ்வப்போது கையை நனைக்க ஒரு பாத்திரத்தில் ஜலம். தோசையைத் திருப்பும்போது கல் இப்படியும் அப்படியும் நகர்வதால் அதைப் பிடித்துக் கொள்ள கிடுக்கி. ஸ்ஸ்ஸ்... போதுமடா.
ஓரிரண்டு வேளைகளுக்கு ஸ்விகி உதவியது. குரோம்பேட்டை பாலாஜி பவனும், மேடவாக்கம் கீதமும்!
இத்தனைக்கும் நண்பர்கள், ‘சாப்பாடு கொண்டு வந்து தரட்டுமா சார்?’ என்றெல்லாம் கேட்டார்கள். இது எப்போதும் வழக்கமில்லை. இருந்தாலும், நன்றி அவர்களுக்கு.
நாளை ஞாயிற்றுக்கிழமைதான் வீட்டுக்கு வருகிறாள் செல்லா.
வாம்மா... வீட்டுச் சாப்பாட்டுக்கு நாக்கு ஏங்குகிறது. சேப்பங்கிழங்கும், வெண்டைக்காயும் தயாரா இருக்கு.
மீள்பதிவு
கடந்த வருடம் இதே நாளில் பதிவிட்டது.